அண்ணல் --ஒரு வசன பார்வை
அவன் எனக்கு எல்லாமும் செய்தான்.
அன்பெனும் மழையைப் பெய்தான்
அவனுக்கு நானென்ன செய்ய முடியும்?
அருந்தமிழில் கவிதை நெய்ய முடியும்.
காவி வஸ்திரம் உடுத்தியவனுக்குக்
கவி வஸ்திரம் உடுத்தத் துணிந்தேன்.
ஞாயிற்றைக் கயிற்றால்
கட்டிவிட முடியுமா?
ஞானத்தின் கொடுமுடியைக்
கவிதையால் தொட்டுவிட முடியுமா?
நானா எழுதுகிறேன்? அவன்
தானேயன்றோ எழுதுகிறான்?
சற்றேறக்குறைய
பத்து நூற்றாடுகளுக்கு முன்
பெரும்புத்தூர் வானத்தில்
பளிச்சிட்டது ஒரு மின்னல்
பின்னாளில் திறந்து வைக்கப்
போகிறது அது
வைணவத்தின் ஜன்னல்.
வைணவத்துக்காக அது ஜன்மித்ததா
இல்லை அது
வைணவத்தை ஜன்மித்ததா என்று
இன்றளவும் என் நெஞ்சிலொரு
கேள்விப் பின்னல்.
அவன் தான்
யதிகளுக்கெல்லாம் எதிராஜன்
ஞான வைராக்ய பீஜன்
எனையாளும் இளையாழ்வார்
இராமானுசன் என்னும் அண்ணல்.
சனாதனச் சமயத்தின் தூணான
விசிஷ்டாத்வைதத்தை தன்
தோளில் தூக்கி நிறுத்தியவன்
பிறந்த பொழுதில்
சமய வானில் எந்தவொரு
சலனமுமில்லை.
எம்பெருமான் திருமேனி தாங்கிய
அரவமே அவன்தான் என்றாலும்
அவன் பிறந்த பொழுதில்
எந்தவொரு அரவமும் இல்லை.
ஐந்து சமயங்களையும்
விழுங்கப் போகும் அந்த ஜ்வாலாமுகி
பிறந்த இடத்துக்குக்
காலத்தின் பாதையில் கவிப் பயணம்
செல்வோம் வாருங்கள்
Puviyil intha kaviyai kaana aavalaga irukkum oru pithanin veagam thaan intha madal..
ReplyDelete