Wednesday, April 30, 2014

அண்ணல் – திருவருள் இரண்டு - யமுனாச்சாரியர்


யமுனாச்சாரியர்

பத்தினை அறிய
ஒன்பதினை அறிதல் அவசியம்.
என் அத்தனை அறிய அவனுக்கு
முன்வந்த மகானுபாவர்களை
அறிதல் அவசியம்.

அன்று வைணவம்
பூத்துக் குலுங்கிய தோட்டமாயில்லை.
அதிரடியாய் நடந்த
அத்வைதப் போரினால்
வாட்டமாயிருந்தது.

யதிராஜன் அவதாரம் நிகழ்வதற்கு
முன்னூறு ஆண்டுகள் முன்
சீறிச் சினந்த அத்வைத பேராழி,
ஆழ்வார்கள் போட்டிருந்த
பக்திப் பாதையை
அடித்துச் சென்றிருந்தது.

அந்த நேரத்தில் தான்
மதுரையம்பதியில் அந்த
அதிசயம் நிகழ்ந்தது.

ஆச்சாரியனுக்கு ஆச்சாரியன்
யமுனைத்துறைவனின்
பிறப்பு நிகழ்ந்தது.

இந்தப் பெயர் பலருக்கு
அறிமுகம் இல்லாமல் இருக்கலாம்.
அவனது இன்னொரு பெயர்
உலகம் அறிந்தது.
அனைவருக்கும் தெரிந்தது.

அது தான் ஆளவந்தார்.
வைணவத்தை ஆளப்போகிறவரை
ஆளவந்தார்.

இராமானுசன் என்னும்
வைணவச் சூரியனுக்கு
ஆரியன்.

நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கு
இசை வடிவம் தந்த
நாதமுனியின் பெயரன்.
நான்மறையும் கற்றுணர்ந்த உயரன்.

மணக்கால் நம்பியின்
நம்பிக்கைக்குப் பாத்திரமானவன்

பிறப்பிலே தந்தையை இழந்தார்.
தாயிடம் வளர்ந்தார்.

ஐந்து வயதில் குருகுலம் அடைந்தார்.
தன் அறிவாலும் அன்பாலும் பண்பாலும்
குருவின் அன்புக்கு உற்றவரானார்.

நான்மறைகளையும் கற்றவரானார்.
  
அப்படிப்பட்ட ஒரு நாளில் தான்
உலகுக்கு அவர் பெருமையை
அறிவிக்குக் கூடிய ஒரு
சம்பவம் நடந்தது.

Monday, April 28, 2014

அண்ணல் - திருவருள் ஒன்று.

அண்ணல் --ஒரு வசன பார்வை

அவன் எனக்கு எல்லாமும் செய்தான்.
அன்பெனும் மழையைப் பெய்தான்
அவனுக்கு நானென்ன செய்ய முடியும்?
அருந்தமிழில் கவிதை நெய்ய முடியும்.

காவி வஸ்திரம் உடுத்தியவனுக்குக்
கவி வஸ்திரம் உடுத்தத் துணிந்தேன்.

ஞாயிற்றைக் கயிற்றால்
கட்டிவிட முடியுமா?
ஞானத்தின் கொடுமுடியைக்
கவிதையால் தொட்டுவிட முடியுமா?

நானா எழுதுகிறேன்? அவன்
தானேயன்றோ எழுதுகிறான்?

சற்றேறக்குறைய
பத்து நூற்றாடுகளுக்கு முன்
பெரும்புத்தூர் வானத்தில்
பளிச்சிட்டது ஒரு மின்னல்

பின்னாளில் திறந்து வைக்கப்
போகிறது அது
வைணவத்தின் ஜன்னல்.

வைணவத்துக்காக அது ஜன்மித்ததா
இல்லை அது
வைணவத்தை ஜன்மித்ததா என்று
இன்றளவும் என் நெஞ்சிலொரு
கேள்விப் பின்னல்.

அவன் தான்
யதிகளுக்கெல்லாம் எதிராஜன்
ஞான வைராக்ய பீஜன்
எனையாளும் இளையாழ்வார்
இராமானுசன் என்னும் அண்ணல்.

சனாதனச் சமயத்தின் தூணான
விசிஷ்டாத்வைதத்தை தன்
தோளில் தூக்கி நிறுத்தியவன்
பிறந்த பொழுதில்
சமய வானில் எந்தவொரு
சலனமுமில்லை.

எம்பெருமான் திருமேனி தாங்கிய
அரவமே அவன்தான் என்றாலும்
அவன் பிறந்த பொழுதில்
எந்தவொரு அரவமும் இல்லை.

ஐந்து சமயங்களையும்
விழுங்கப் போகும் அந்த ஜ்வாலாமுகி
பிறந்த இடத்துக்குக்
காலத்தின் பாதையில் கவிப் பயணம்
செல்வோம் வாருங்கள்