இந்த யமுனைத்துறைவனின்
துறவுச் சீடர்களில் ஒருவர்தான்
இரும்பை காந்தம் இழுத்தாற்போலும்
எறும்பை சர்க்கரை அழைத்தாற்போலும்
துறைவனின் சித்தாந்தங்களில்
இறைவனைக் காண
ஆனமான சமயங்கள் ஆறுக்கும்
தானமாய் நின்ற ஞான பூரணன்
மேதினி மீதுழல் பொய்யர்க்கு
பாதநிழல் புகலிடம் தந்த மெய்யன்
ஐயன் யதிராஜன் ஆதிசேடன்
ஆழிசூழ் உலகும் வாழ்த்திடும்
இராமானுசன்.
யமுனைத் துறைவனின் சீடர்
ஸ்ரீசைல பூர்ணரின் சகோதரி காந்திமதி
திருவயிற்றில் வந்துதித்த
வைணவ வெளிச்சம்.
பிறவியிலேயே
பெறப்போகும் பெருமைகளின்
தெய்வீகச் சின்னங்களோடு பிறந்தவனைப்
பார்க்க வந்த பூரணர்
வைத்த பெயரே இராமானுசன்.
இளமையிலேயே
நூறு சூரியன் போலொளிர்ந்தார்
ஒருமுறை கற்றதை மறுமுறை கற்கும்
தேவையற்றவனானார் .
அடக்கமோடு இணைந்த அறிவால்
அனைவருக்கும் உற்றவனானார்
அவர் வாழ்ந்த பூதபுரியின்
அருகிலிருந்த காஞ்சியில்
காஞ்சிபூரணர் எனும் பக்தர் இருந்தார்.
அவரும் நாரணர் பக்தர்
துறைவன் சீடர்.
நித்தம் காஞ்சியிலிருந்து
பெருமாளை சேவிக்க
பூவிருந்தவல்லி வருவார்.
அப்படிப்பட்ட நாளொன்றில்
எதிராஜரைச் சந்தித்தார்.
மதுவால் ஈர்க்கப்பட்ட வண்டாக
உடையவர் ஈர்க்கப்பட்டார்.
உணவருந்த தனது இல்லத்துக்கு
ஆமந்தரித்தார்.
களிப்புடன் சென்றார்
காஞ்சிபூரணர்
போஜனம் முடிந்தபின்னர்
ராஜ உபசாரம்.
குலமிலான் குணங்குறியிலான்
இலக்குமி மணாளனை தாங்கும்
ஆதிசேடன் பூரணருக்கு
புரிந்தான் பாதசேவை!
அந்தணன் தன்பாதம் பிடிப்பதாவென
நொந்தார் காஞ்சிபூரணர்.
மனமுவக்கும் சேவைக்கு
முப்புரிநூல் தடைஎனில் களைந்ததனை
இனமற்று நிற்பேன் என்றார் உடையவர்.
உருகினார் அகமகிழ்ந்தார் பூரணர்.
இரவெலாம் நாரணனைப் பற்றி
உரையாடினார்கள்.
மறுநாள் காஞ்சி திரும்பினாலும்
மனதால் ஒன்றுபட்டனர்
மாதவனின் அடியார்கள் இருவரும்.
...வளரும்....
Annal Ramanusan
Friday, June 6, 2014
Wednesday, May 7, 2014
அண்ணல் - 3 (மூன்று கேள்விகள்)
மூன்று கேள்விகள்
சோழனின் அரசவையில்
ஆணவத்தின் உருவமாக இருந்தான்
ஆக்கியாழ்வான் என்னும் கோலாஹலன்
அரசவைப் பண்டிதன்.
செருக்கின் காரணமாக
மற்ற அறிஞரை வெறுத்தான்.
கப்பம் செலுத்தச் சொல்லி
கொக்கரித்தான்
ஆளவந்தாரின் குருவுக்கும்
ஒலையனுப்பினான்
ஆக்கியாழ்வான் ஓலைகண்டு வேதனையால்
தாக்கப்பட்டார் குருநாதர்
சீடனுக்குக் குருவின்
துன்பம் காணச் சகிக்கவில்லை
மூடனின் ஓலையை
மூலையில் கிழித்தெறிந்தான்
விடயமறிந்த வீணன்
முடிவிலாத சினமுற்றான்
ஆரென அறிந்துவரும்படி
ஆளனுப்பினான்
வைகுண்டத்து இறைவன் இருக்க
கலங்குவாரோ யமுனைத் துறைவன்?
கரிமுகம் பிளந்துகொல்லும்
அரிகள் யாம்; கவிக ளல்லர்
கப்பம் செலுத்தோமெனக்
பதிலிறுத்தார்.
வெறிகொண்ட ஆக்கியும்
அரசனிடம் புகலடைந்தான்.
உடனே வருகவென
அரசாணைப் பறந்தது.
ஆளவந்தார் அதையும் கிழிக்க
அதுவும் காற்றில் பறந்தது
தக்க மரியாதைகளுடன்
சிவிகையினை அனுப்பினால்
அக்கணமே வருவாரென
அரசியார் சொல்ல
அதுபோலே சிவிகையில்
ஆளவந்தாரைத் தருவித்தான்.
பல்லக்கில் ஏறிவந்தார்
பாலகன் யமுனைத்துறைவன்
என்னை வென்றிட ஆளுண்டோவென
ஆக்கியாழ்வானிடம் எழுதிக் காட்டினான்
தருக்கம் செய்துந்தன்
செருக்கடக்குவேன் என்று
சபதம் செய்தான் பண்டிதன்.
மனம் கலங்கினான் மன்னன் பால்
மணம் மாறாப் பிள்ளையைக் கண்டு.
அஞ்சேல் என்றாள் அரசி.
ஒருதுளி மோர் ஒருகுடம் பாலைத்
திரிக்கும்
சிறுதுளி பனியே உயர்ந்த மலையை
மறைக்கும் என்றாள்.
நீ தோற்றால் உன்னை
நாடு கடத்துவேன்
நான் தோற்றால் என்
நாட்டில் பாதி இவனுக்களிப்பேன்
என்றான் சோழன்.
சபை கூடியது.
தோல்வி வெற்றி தீர்மானிக்க
நடுவர் குழுவும் அமர்ந்தது.
கோலாஹலன் கேள்விகளுக்கு
பாலகன் பதிலிறுத்தார்.
பண்டிதன் மனம் தளர்ந்தான்.
கேள்விக்கணைத் தொடுக்க
குழந்தைக்கு வாய்ப்பு
சான்றோக்கு முன்னால் நான்
மூன்று வினா தொடுப்பேன்
பண்டிதரே அவற்றை மறுத்துப்
பதில் நீரும் சொல்லுமென்றான்
உன்னன்னை மலடியில்லை
மன்னனிவன் பேரரசன்
மகாராணியோ பதிவிரதை
இவற்றை மறுத்துநீர் சொன்னால்
உம் பாதம் பணிவேன் என்றான்.
பண்டிதன் திகைத்தான்
பார்த்தவர் நகைத்தார்
நீரே விடையிறும் என்றான்.
அறிஞரைத் துன்புறுத்தும் பிள்ளை
பெறுதலும் பெறாமையும் ஒன்றே.
ஆதலால் உம் தாய் மலடி
அகிலம் ஆண்டாலே பேரரசன்
இவரோ இந்நாட்டு மன்னர்
ஆதலால் இவர் பேரரசரில்லை
சோமன் கந்தருவன் அக்கினி
ஆட்கொள்வார் மும்மூன்று ஆண்டு
பின்னரே பெண்ணுக்கு இங்கு
கன்னிகா தானம் அதனால்
மகாராணி பதிவிரதை என்பது
மறைகளுக்கு ஒவ்வாத ஒன்று
ஆதலால் அவள் பதி விரதையில்லை
துறைவனின் பதிலைக் கேட்டு
உறைந்தனர் அரச அவையினர்
மன்னரின் சொல்மீறி யதையிவர்
மறைமுகமாய் சொன்னாரெனத் தெளிந்து
'எம்மை ஆளவந்தீரோ?"
என்றிவர் அடிபணிந்தாள் அரசி.
Wednesday, April 30, 2014
அண்ணல் – திருவருள் இரண்டு - யமுனாச்சாரியர்
யமுனாச்சாரியர்
பத்தினை அறிய
ஒன்பதினை அறிதல் அவசியம்.
என் அத்தனை அறிய அவனுக்கு
முன்வந்த மகானுபாவர்களை
அறிதல் அவசியம்.
அன்று வைணவம்
பூத்துக் குலுங்கிய தோட்டமாயில்லை.
அதிரடியாய் நடந்த
அத்வைதப் போரினால்
வாட்டமாயிருந்தது.
யதிராஜன் அவதாரம் நிகழ்வதற்கு
முன்னூறு ஆண்டுகள் முன்
சீறிச் சினந்த அத்வைத பேராழி,
ஆழ்வார்கள் போட்டிருந்த
பக்திப் பாதையை
அடித்துச் சென்றிருந்தது.
அந்த நேரத்தில்
தான்
மதுரையம்பதியில்
அந்த
அதிசயம்
நிகழ்ந்தது.
ஆச்சாரியனுக்கு
ஆச்சாரியன்
யமுனைத்துறைவனின்
பிறப்பு
நிகழ்ந்தது.
இந்தப் பெயர்
பலருக்கு
அறிமுகம்
இல்லாமல் இருக்கலாம்.
அவனது இன்னொரு
பெயர்
உலகம் அறிந்தது.
அனைவருக்கும்
தெரிந்தது.
அது தான்
ஆளவந்தார்.
வைணவத்தை
ஆளப்போகிறவரை
ஆளவந்தார்.
இராமானுசன்
என்னும்
வைணவச்
சூரியனுக்கு
ஆரியன்.
நம்மாழ்வாரின்
பாசுரங்களுக்கு
இசை வடிவம் தந்த
நாதமுனியின்
பெயரன்.
நான்மறையும்
கற்றுணர்ந்த உயரன்.
மணக்கால்
நம்பியின்
நம்பிக்கைக்குப்
பாத்திரமானவன்
பிறப்பிலே
தந்தையை இழந்தார்.
தாயிடம்
வளர்ந்தார்.
ஐந்து வயதில்
குருகுலம் அடைந்தார்.
தன் அறிவாலும்
அன்பாலும் பண்பாலும்
குருவின்
அன்புக்கு உற்றவரானார்.
நான்மறைகளையும்
கற்றவரானார்.
அப்படிப்பட்ட ஒரு
நாளில் தான்
உலகுக்கு அவர்
பெருமையை
அறிவிக்குக்
கூடிய ஒரு
சம்பவம் நடந்தது.
Monday, April 28, 2014
அண்ணல் - திருவருள் ஒன்று.
அண்ணல் --ஒரு வசன பார்வை
அவன் எனக்கு எல்லாமும் செய்தான்.
அன்பெனும் மழையைப் பெய்தான்
அவனுக்கு நானென்ன செய்ய முடியும்?
அருந்தமிழில் கவிதை நெய்ய முடியும்.
காவி வஸ்திரம் உடுத்தியவனுக்குக்
கவி வஸ்திரம் உடுத்தத் துணிந்தேன்.
ஞாயிற்றைக் கயிற்றால்
கட்டிவிட முடியுமா?
ஞானத்தின் கொடுமுடியைக்
கவிதையால் தொட்டுவிட முடியுமா?
நானா எழுதுகிறேன்? அவன்
தானேயன்றோ எழுதுகிறான்?
சற்றேறக்குறைய
பத்து நூற்றாடுகளுக்கு முன்
பெரும்புத்தூர் வானத்தில்
பளிச்சிட்டது ஒரு மின்னல்
பின்னாளில் திறந்து வைக்கப்
போகிறது அது
வைணவத்தின் ஜன்னல்.
வைணவத்துக்காக அது ஜன்மித்ததா
இல்லை அது
வைணவத்தை ஜன்மித்ததா என்று
இன்றளவும் என் நெஞ்சிலொரு
கேள்விப் பின்னல்.
அவன் தான்
யதிகளுக்கெல்லாம் எதிராஜன்
ஞான வைராக்ய பீஜன்
எனையாளும் இளையாழ்வார்
இராமானுசன் என்னும் அண்ணல்.
சனாதனச் சமயத்தின் தூணான
விசிஷ்டாத்வைதத்தை தன்
தோளில் தூக்கி நிறுத்தியவன்
பிறந்த பொழுதில்
சமய வானில் எந்தவொரு
சலனமுமில்லை.
எம்பெருமான் திருமேனி தாங்கிய
அரவமே அவன்தான் என்றாலும்
அவன் பிறந்த பொழுதில்
எந்தவொரு அரவமும் இல்லை.
ஐந்து சமயங்களையும்
விழுங்கப் போகும் அந்த ஜ்வாலாமுகி
பிறந்த இடத்துக்குக்
காலத்தின் பாதையில் கவிப் பயணம்
செல்வோம் வாருங்கள்
Subscribe to:
Comments (Atom)